தொகுப்பு:
திருமதி கௌரி விமலேந்திரன்
எமது வாழ்க்கையை மாற்றி அமைத்து உயர்வடையச் செய்வது பெரியோர்களது வாழ்க்கை வரலாறுகளாகும். அதிலும் தீர்க்க தரசிகள் மகான்கள் அருளிய சிந்தனைச் செல்வங்களை நாம் அறிவதற்கு எம்மிடம் அவதான ஆற்றலும் மெய்யுணர்தலும் திடசங்கற்பமும் இருத்தல் வேண்டும். அவை இல்லாவிடில் எம்மால் முன்னேற முடியாது.
இவ்வுலகில் தோன்றிய ஆறு தீர்க்கதரிசிகள் எங்கள் ஆசியாக் கண்டத்திலேயே பிறந்துள்ளனர்.. தீர்க்கதரிசி ஜார துஷ்டடிரர் சுமார் 3000 ஆண்டுகட்கு முன் பாரசீக நாட்டில் வாழ்ந்தவர். கண்பூஷியஸ் லாவோத்ஸே ஆகியோர் 2500 ஆண்டுகட்கு முன் சீன தேசத்தில் வாழ்ந்தவர்கள். அதே காலத்தில் பாரத நாட்டில் கௌதம புத்தர் வாழ்ந்தார். புத்தருக்கு பின் பலஸ்தீனத்தில் ஏசு கிறிஸ்து தோன்றினார். அவருக்குப் பின் அரேபியாவில் நபிகள் நாயகம் அவதரித்தார்.
புத்தர் வாழ்ந்த காலம் மிக அருமையானது. அக் காலத்தில் இந்தியா செல்வமும் செழிப்பும் பெற்று உலகின் நடு நாயகமாக விளங்கிவந்தது. கோசல நாட்டில் அதைச் சுற்றியிருந்த பிராந்தியங்களிலுமே பரவியிருந்த பௌத்த தருமத்தை உலகப் பெருஞ் சமயமாக்கி உயர்த்திய அசோக சக்கரவர்த்தி மாநில மன்னர்களில் முதன்மையானவராக இன்றளவும் கருதப் பெற்று வருகிறார்.
பௌத்த தர்மத்தின் விளைவாக நாடெங்கும் கல்வியும், கலைகளும் பெருகி வளர்ந்தன. சிற்பங்களும் சிலைகளும் எக்காலத்தும் இல்லாத முறையில் செழித்துப் பெருகின. சாதி ஏற்றத் தாழ்வுகள் குறைந்து எங்கும் சமரச மனப்பான்மை தழைத் தோங்கி வந்தது. புத்த ஞாயிற்றின் ஒளி ஆசியாக் கண்டத்தில் பல நாடுகளிலும் இருளினை அகற்றி மக்கள் மனக்கண்களைத் திறந்து ஒரு புது வாழ்வை ஆரம்பித்து வைத்தது. சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஜாவா, சுமத்திரா, பர்மா, இலங்கை, நேபாளம், திபெத், மற்றும் பல இடங்களில் பௌத்தம் பல்கிப்பெருகியது. போதி மாதவரின் புனிதக் கொள்கைகள் இலங்கையிலே மூல மொழியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அழிவுப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் எம் உலகை பௌத்த தர்மம் பாதுகாக்கும் என்று அறிஞர்கள் தம் ஆராய்ச்சி மூலம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
புத்தர் புனிதமானவர். அவரை ஒரு தடவை மனக் கண்முன் கொண்டுவந்தால்-அவருடைய உருவ அமைப்பு எம்மை பரவசமடையச் செய்யும். வெண் திரையின் மீது விரி கதிர்கள் நாண எரிதழல் தோற்றம், ஆண் யானை போன்ற நடை மானின் கால்களைப் போன்ற கால்கள், மெல்லிய உடல் பொன்நிறம், நீண்டவிரல்கள் தடக்கைகள், சங்குபோல் உருண்ட கணைக் கால்கள், அடர்ந்து இருண்ட தலைமுடி கருநீலக் கண்கள் பசுவின் இமைகளைப் போல் நீண்டு அகன்ற இமைகள் பவள வாய் முத்துப் பற்கள் அமைதியான ஒளிபரப்பும் திருமுகம், இத்தனை எழில் நலன்களும் கொண்டு அவர் மக்களையும் மன்னர்களையும் மறையோர்களையும் வசீகரித்தார்.
எல்லாவற்றிலும் மேலாக அவருடைய குரல் இமயமலைச் சாரலிலுள்ள இசைப் பறவையின் குரலைப் போன்றது என்றும் ஆராய்ச்சியாளரின் கருத்து கணிப்பு இருக்கிறது.
புத்தர் தான் காணும் விஷயங்களை ஆதாரமாக கொண்டு பகுத்தறிவுக்கு ஏற்ப உபதேசம் செய்தார். உலகில் துக்கம் நிறைந்திருப்பதை கண்டு அதற்குக் காரணம் அவா, அதன் காரணம் பேதமை என அறிந்து அதை அகற்ற பல உபதேசங்களை வழங்கினார். அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.
- உங்களுக்கு நீங்களே தீபங்களாயிருங்கள்.
- உயிர்களுக்கு நீங்களே புகலிடமாயிருங்கள்.
- வெளியில் எத்தகைய புகலிடத்தையும் நாட வேண்டாம்.
- சத்தியத்தையே தீபமாக அடைக்கலமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
- உங்களைத் தவிர வேறு சரணடைய வேண்டிய எவரையும் நாட வேண்டாம்.
- உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலை பெற்றவனுடைய மனம் சொல்- செயல் சாந்தியாயிருக்கும்.
- சிரத்தையின்றி செய்யும் காரியமும் ஒழுங்காக கடைப்பிடிக்காத விரதமும் மனமாரப் பேணாத பிரம சரியமும் பெரும் பயனை அளிக்கமாட்டா.
- கொல்ல வேண்டாம், உயிரைப் பேணுங்கள், திருட வேண்டாம், ஒவ்வொருவரும் தமது உழைப்பின் பயனைத் துய்ப்பதற்கு உதவுங்கள்.
- பொய் பேச வேண்டாம். பயமில்லாமலும் அன்பு கலந்த உள்ளத்துடனும் உண்மையைப் பேசுங்கள்.
- பிறரைப் பழிக்கின்ற செய்திகளை கற்பனை செய்ய வேண்டாம் அவைகளைப் பரப்பவும் வேண்டாம்.
- கூடவாழும் மக்களைப் பற்றி குறை கூற வேண்டாம்.
- அவர்களுடைய நற்குணங்களைப் பாராட்டுங்கள்.
இவ்வுலகில் எக் காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினால்தான் தணியும் இதுவே பண்டை அற நெறி!
கௌதமரின் போதனைகள் அற்புதமானவை. எம்மை நெறிப்படுத்துபவை. ஒவ்வொரு தத்துவத்தையூம் உணர்ந்து நடந்தால் எமக்குத் துன்பமில்லை. புத்தரின் தர்ம சக்கரம் இயற்கையாக இயங்கும் வியாபகமான சத்தியை கொண்டது.
புத்தரின் சரித்திரத்தில் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம் அவர் பிறந்த தினமும் ஞானபோதம் பெற்ற தினமும் நிருவாணம் அடைந்த தினம் ஒன்றாகும்! அதுவே வைகாசிப் பௌர்ணமியாகும்.
இது ஆச்சரியமான ஒரு செயல்! வைகாசிப் பௌர்ணமி தினத்தை இலங்கையில் உள்ள புத்த மதத்தவா வெசாக் பெருநாளாக நோம்பிருந்து அன்னதானம் தண்ணீர்ப் பந்தல் என தான தர்மமாக உன்னதமாக செய்கின்றார்கள். பௌத்த குருமார்களால் விசேட தர்ம போதனைகளும் பிரித் ஓதுதலும் - நாடு முழுவதும் புத்த பிரானின் வரலாற்றை சித்தரிக்கும் ஓவியப் பந்தல்கள் நிறுவப் பட்டு மின் தீப அலங்காரங்கள் செய்து இந்திரலோகம் போல காட்சியளிக்கும். புத்தமதம் பிறந்தது இந்தியாவில் என்றாலும் - அது வளர்ந்து பேணப்படுவது எங்கள் இலங்கையில் தான்!
இலங்கையில் வாழும் பௌத்த சிங்கள மக்கள் புத்த பிரானுக்கும் தம்ம பதத்துக்கும் கொடுக்கும் மதிப்பும் அனுசரணையும் எண்ணிலடங்காது. மனிதன் பூரணத்துவம் அடைய வேண்டும் சத்திய தரிசனம் பெற வேண்டும். என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார் புத்தர்.
அன்புதான் இன்ப ஊற்று-அன்புதான் இன்ப ஜோதி - அன்புதான் உல மகா சக்தி| என்பதில் அசையா நம்பிக்கை கொண்டார் புத்தர். பகவான் புத்தரின் அற்புதமான் வாசகங்களை மனதில் இருத்தி அதன்படி ஒழுகினால் நாட்டில் அன்பு பெருகும், செல்வம் செழிக்கும், சாந்தி நிலவும, மக்களுக்
கு எந்தக் குறையும் ஏற்படாது.
அரிது அரிது மானிடராய் பிறத்தல்
அரிது அரிது மானிட வாழ்க்கை.
அரிது அரிது நல்லறம் கேட்டல்
அரிது அரிது புத்த நிலை அடைதல்
நற் காட்சி - நல்லூற்றம் - நல் வாய்மை -நற்செய்கை நல் வாழ்க்கை நல்லூக்கம் நற்கடைப்பிடி நல்லமைதி - புத்தரின் அஷ்டாங்க மார்க்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்து உய்வடைய முயற்சிப்போம்!
நன்றி – புத்தரின் போதனைகள் - தம்ம பதம்
This article was published in Buddhist Society, Golden Jubilee Souvenir.