Sunday, July 17, 2022

ஆடிப்பிறப்பு 2022

 --------------------

தை சித்திரைபோலஆடிமாதப்பிறப்பும் விசேஷமானது

தைமாதப்பிறப்புசித்திரை மாதப்பிறப்பு என்று சொல்வதுபோல ஆடிமாதப்பிறப்பு என்று சொல்லாமல்ஆடிப்பிறப்பு என்று சொல்வதே ஆடிமாததுக்குரிய தனிச் சிறப்பு

ஆடிப்பிறப்பென்றால் நமக்கு நினைவுக்கு வருவது நம் நாட்டின் பெருமைக்குரியவரான நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை..ஆனந்தம் ஆனந்தம் தோழர்களேஎன்ற இனிமையானமகிழ்ச்சிகரமான பாடலும்ஆடிக்கூழும்கொழுக்கட்டையும்தான்


என்றைக்குத்தான் இதை மறக்க முடியும்ஈழத்தமிழ் மக்கள் இதை என்றுமே மறக்க மாட்டார்கள்எத்தனைகஷ்டங்கள் வந்தாலும்இந்த ஆடிக்கூழ்அவரவர் இல்லங்களில் இயன்றவரை சிறு அளவிலேனும்இடம்பெற்றேயாகும்விதம்விதமான தின்பண்டங்கள்  இன்று பலராலும் புதிதுபுதிதாக எம் உணவில்சேர்க்கப்பட்டாலும்இந்த ஆடிக்கூழ் விசேஷமானதுதான்

வருடம் ஒருதடவை வரும்  இந்த நாளை எம் மக்கள் மிக விசேடமாகத்தான் கொண்டாடுகிறார்கள்இந்த நல்லநாளில் ஆலயம் செல்லும் மக்கள் ,  அசைவம் சாப்பிடுபவர்கள் அதைத்தவிர்த்து சைவமாக உணவருந்துவதும்ஆடிக்கூழ் காய்ச்சுவதும்கூழ்காய்ச்ச இயலாதவர்க்ளுக்கு கொடுத்து மகிழ்வதும்அயலவர்களுக்கு பகிர்ந்துகொடுப்பதும்மற்ற இனமக்களுக்கு கொடுத்து  தாம் உண்பதும் இந்த ஆடிப்பிறப்பில்தான்

இன்றைய காலத்தில் இவை நடைமுறையில் இருக்கிறதா என்பது சற்று பலரை சிந்திக்க வைக்கும்ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று அன்று பாடிமகிழ்ந்தனர்இன்று..அந்த விடுதலை இல்லையல்லவா


நம் தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்த எம்மக்கள் இன்றைய தினத்தை மறக்காமல்கூழ் காய்ச்சிகொழுக்கட்டை அவித்து  உண்பது பாராட்டுக்குரியது.எங்கள் சைவப் பழக்கவழக்கங்களைஇயன்றவரைஏற்றுநடப்பதும்பெருமைக்குரியதுதான்


இதற்கு காரணம் அதில் ஊன்றிப்போன பெற்றோர்கள்தான்தம் பிள்ளைகளுக்கு அதை சொல்லிவளர்ப்பதும்மேல்நாட்டு பழக்கவழக்கங்களில் ஊன்றினாலும்எமது தமிழ் நாகரிக பண்புகளையும் மறக்காமல்எத்தனையோபேர் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்சியாகத்தன் இருக்கிறதுபெற்றோர் இதைப் பழக்கத்தில்கொண்டுவரும்போது பிள்ளைகளும் அதை நடைமுறைப்படுத்த இயன்றவரை முயல்வார்கள்வெளிநாடுகளில்இன்று சகல பொருட்களும் இறக்குமதியாகின்றனவாழை இலைவேப்பிலை முதல் பனங்கட்டிபாசிப்பருப்புஈறாக இங்கு கிடைக்காவிட்டாலும்அங்கு கிடைக்கிறதுஅதைப்பயன்படுத்தி தமிழ் பண்பை மறக்காதவர்கள்தம்மால் முடிந்தவரை நேரம் ஒதுக்கி இதனை செய்து மகிழ்கிறார்கள்


ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைபெய்யும்

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆடிச்செவ்வாய் தேடிக்குளிஅரைத்த மஞ்சல் பூசிக்குழிஆடிக்கூழ் அமிர்தம்...

இப்படி எத்தனை பழமொழிகள்..


நாமும் ஆடிப்பிறப்பை மகிழ்வோடு கொண்டாடுவோம்

விழாக்கள் அனைத்துமே ஆடிமாதத்திலிருந்து தொடங்குகின்றனதஷிணாயன புண்ணிய காலமும்தொடங்குகிறதுஇனிவரும் விழாக்களை கொண்டாட தயாராவோம்


ஆடிமாத்துக்குரிய சிறப்புக்களை அவரவர்கள் தம் ஊர்களில் இதனை எப்படி கொண்டாடி ,மகிழ்கிறார்கள்என்பதை பகிர்ந்து கொள்ளலாம்

தயங்காமல்எழுதி மற்றவர்க்ளும் அறிய தெரியப்படுத்துங்கள்.

நன்றி

ஓம் சக்தி

-சக்தி.கெளரி விமலேந்திரன்

Saturday, July 2, 2011

போதி வேந்தரின் தர்ம சிந்தனைகள்


தொகுப்பு:
திருமதி கௌரி விமலேந்திரன்

எமது வாழ்க்கையை மாற்றி அமைத்து உயர்வடையச் செய்வது பெரியோர்களது வாழ்க்கை வரலாறுகளாகும். அதிலும் தீர்க்க தரசிகள் மகான்கள் அருளிய சிந்தனைச் செல்வங்களை நாம் அறிவதற்கு எம்மிடம் அவதான ஆற்றலும் மெய்யுணர்தலும் திடசங்கற்பமும் இருத்தல் வேண்டும். அவை இல்லாவிடில் எம்மால் முன்னேற முடியாது.

இவ்வுலகில் தோன்றிய ஆறு தீர்க்கதரிசிகள் எங்கள் ஆசியாக் கண்டத்திலேயே பிறந்துள்ளனர்.. தீர்க்கதரிசி ஜார துஷ்டடிரர் சுமார் 3000 ஆண்டுகட்கு முன் பாரசீக நாட்டில் வாழ்ந்தவர். கண்பூஷியஸ் லாவோத்ஸே ஆகியோர் 2500 ஆண்டுகட்கு முன் சீன தேசத்தில் வாழ்ந்தவர்கள். அதே காலத்தில் பாரத நாட்டில் கௌதம புத்தர் வாழ்ந்தார். புத்தருக்கு பின் பலஸ்தீனத்தில் ஏசு கிறிஸ்து தோன்றினார். அவருக்குப் பின் அரேபியாவில் நபிகள் நாயகம் அவதரித்தார்.

புத்தர் வாழ்ந்த காலம் மிக அருமையானது. அக் காலத்தில் இந்தியா செல்வமும் செழிப்பும் பெற்று உலகின் நடு நாயகமாக விளங்கிவந்தது. கோசல நாட்டில் அதைச் சுற்றியிருந்த பிராந்தியங்களிலுமே பரவியிருந்த பௌத்த தருமத்தை உலகப் பெருஞ் சமயமாக்கி உயர்த்திய அசோக சக்கரவர்த்தி மாநில மன்னர்களில் முதன்மையானவராக இன்றளவும் கருதப் பெற்று வருகிறார்.

பௌத்த தர்மத்தின் விளைவாக நாடெங்கும் கல்வியும், கலைகளும் பெருகி வளர்ந்தன. சிற்பங்களும் சிலைகளும் எக்காலத்தும் இல்லாத முறையில் செழித்துப் பெருகின. சாதி ஏற்றத் தாழ்வுகள் குறைந்து எங்கும் சமரச மனப்பான்மை தழைத் தோங்கி வந்தது. புத்த ஞாயிற்றின் ஒளி ஆசியாக் கண்டத்தில் பல நாடுகளிலும் இருளினை அகற்றி மக்கள் மனக்கண்களைத் திறந்து ஒரு புது வாழ்வை ஆரம்பித்து வைத்தது. சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஜாவா, சுமத்திரா, பர்மா, இலங்கை, நேபாளம், திபெத், மற்றும் பல இடங்களில் பௌத்தம் பல்கிப்பெருகியது. போதி மாதவரின் புனிதக் கொள்கைகள் இலங்கையிலே மூல மொழியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அழிவுப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் எம் உலகை பௌத்த தர்மம் பாதுகாக்கும் என்று அறிஞர்கள் தம் ஆராய்ச்சி மூலம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

புத்தர் புனிதமானவர். அவரை ஒரு தடவை மனக் கண்முன் கொண்டுவந்தால்-அவருடைய உருவ அமைப்பு எம்மை பரவசமடையச் செய்யும். வெண் திரையின் மீது விரி கதிர்கள் நாண எரிதழல் தோற்றம், ஆண் யானை போன்ற நடை மானின் கால்களைப் போன்ற கால்கள், மெல்லிய உடல் பொன்நிறம், நீண்டவிரல்கள் தடக்கைகள், சங்குபோல் உருண்ட கணைக் கால்கள், அடர்ந்து இருண்ட தலைமுடி கருநீலக் கண்கள் பசுவின் இமைகளைப் போல் நீண்டு அகன்ற இமைகள் பவள வாய் முத்துப் பற்கள் அமைதியான ஒளிபரப்பும் திருமுகம், இத்தனை எழில் நலன்களும் கொண்டு அவர் மக்களையும் மன்னர்களையும் மறையோர்களையும் வசீகரித்தார்.

எல்லாவற்றிலும் மேலாக அவருடைய குரல் இமயமலைச் சாரலிலுள்ள இசைப் பறவையின் குரலைப் போன்றது என்றும் ஆராய்ச்சியாளரின் கருத்து கணிப்பு இருக்கிறது.

புத்தர் தான் காணும் விஷயங்களை ஆதாரமாக கொண்டு பகுத்தறிவுக்கு ஏற்ப உபதேசம் செய்தார். உலகில் துக்கம் நிறைந்திருப்பதை கண்டு அதற்குக் காரணம் அவா, அதன் காரணம் பேதமை என அறிந்து அதை அகற்ற பல உபதேசங்களை வழங்கினார். அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.

  • உங்களுக்கு நீங்களே தீபங்களாயிருங்கள்.
  • உயிர்களுக்கு நீங்களே புகலிடமாயிருங்கள்.
  • வெளியில் எத்தகைய புகலிடத்தையும் நாட வேண்டாம்.
  • சத்தியத்தையே தீபமாக அடைக்கலமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
  • உங்களைத் தவிர வேறு சரணடைய வேண்டிய எவரையும் நாட வேண்டாம்.
  • உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலை பெற்றவனுடைய மனம் சொல்- செயல் சாந்தியாயிருக்கும்.
  • சிரத்தையின்றி செய்யும் காரியமும் ஒழுங்காக கடைப்பிடிக்காத விரதமும் மனமாரப் பேணாத பிரம சரியமும் பெரும் பயனை அளிக்கமாட்டா.
  • கொல்ல வேண்டாம், உயிரைப் பேணுங்கள், திருட வேண்டாம், ஒவ்வொருவரும் தமது உழைப்பின் பயனைத் துய்ப்பதற்கு உதவுங்கள்.
  • பொய் பேச வேண்டாம். பயமில்லாமலும் அன்பு கலந்த உள்ளத்துடனும் உண்மையைப் பேசுங்கள்.
  • பிறரைப் பழிக்கின்ற செய்திகளை கற்பனை செய்ய வேண்டாம் அவைகளைப் பரப்பவும் வேண்டாம்.
  • கூடவாழும் மக்களைப் பற்றி குறை கூற வேண்டாம்.
  • அவர்களுடைய நற்குணங்களைப் பாராட்டுங்கள்.

இவ்வுலகில் எக் காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினால்தான் தணியும் இதுவே பண்டை அற நெறி!

கௌதமரின் போதனைகள் அற்புதமானவை. எம்மை நெறிப்படுத்துபவை. ஒவ்வொரு தத்துவத்தையூம் உணர்ந்து நடந்தால் எமக்குத் துன்பமில்லை. புத்தரின் தர்ம சக்கரம் இயற்கையாக இயங்கும் வியாபகமான சத்தியை கொண்டது.

புத்தரின் சரித்திரத்தில் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம் அவர் பிறந்த தினமும் ஞானபோதம் பெற்ற தினமும் நிருவாணம் அடைந்த தினம் ஒன்றாகும்! அதுவே வைகாசிப் பௌர்ணமியாகும்.

இது ஆச்சரியமான ஒரு செயல்! வைகாசிப் பௌர்ணமி தினத்தை இலங்கையில் உள்ள புத்த மதத்தவா வெசாக் பெருநாளாக நோம்பிருந்து அன்னதானம் தண்ணீர்ப் பந்தல் என தான தர்மமாக உன்னதமாக செய்கின்றார்கள். பௌத்த குருமார்களால் விசேட தர்ம போதனைகளும் பிரித் ஓதுதலும் - நாடு முழுவதும் புத்த பிரானின் வரலாற்றை சித்தரிக்கும் ஓவியப் பந்தல்கள் நிறுவப் பட்டு மின் தீப அலங்காரங்கள் செய்து இந்திரலோகம் போல காட்சியளிக்கும். புத்தமதம் பிறந்தது இந்தியாவில் என்றாலும் - அது வளர்ந்து பேணப்படுவது எங்கள் இலங்கையில் தான்!

இலங்கையில் வாழும் பௌத்த சிங்கள மக்கள் புத்த பிரானுக்கும் தம்ம பதத்துக்கும் கொடுக்கும் மதிப்பும் அனுசரணையும் எண்ணிலடங்காது. மனிதன் பூரணத்துவம் அடைய வேண்டும் சத்திய தரிசனம் பெற வேண்டும். என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார் புத்தர்.

அன்புதான் இன்ப ஊற்று-அன்புதான் இன்ப ஜோதி - அன்புதான் உல மகா சக்தி| என்பதில் அசையா நம்பிக்கை கொண்டார் புத்தர். பகவான் புத்தரின் அற்புதமான் வாசகங்களை மனதில் இருத்தி அதன்படி ஒழுகினால் நாட்டில் அன்பு பெருகும், செல்வம் செழிக்கும், சாந்தி நிலவும, மக்களுக்
கு எந்தக் குறையும் ஏற்படாது.

அரிது அரிது மானிடராய் பிறத்தல்
அரிது அரிது மானிட வாழ்க்கை.
அரிது அரிது நல்லறம் கேட்டல்
அரிது அரிது புத்த நிலை அடைதல்
நற் காட்சி - நல்லூற்றம் - நல் வாய்மை -நற்செய்கை நல் வாழ்க்கை நல்லூக்கம் நற்கடைப்பிடி நல்லமைதி - புத்தரின் அஷ்டாங்க மார்க்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்து உய்வடைய முயற்சிப்போம்!


நன்றி – புத்தரின் போதனைகள் - தம்ம பதம்

This article was published in Buddhist Society, Golden Jubilee Souvenir.

Thursday, December 17, 2009

சீரும் பேறும் தரும் பௌர்ணமி மருவூரின் சித்திரைப் பௌர்ணமி

சீரும் பேறும் தரும் பௌர்ணமி, அது மருவூரின் சித்திரைப் பௌர்ணமி. எத்தனை பௌர்ணமிகள் வருகின்றன. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி! பூரணமான ஒருநாள். நம் கண்களுக்கு நிலா அழகாகத் தெரிகிறது. அந்த பூரண நாளில் பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள். சித்தவனம் என அழைக்கப்படும் மருவத்தூரில் 21 சித்தர்களின் ஜீவ சமாதி இருப்பதால் அதிகளவில் உலாவி வருகிறார்கள். அன்னை ஆதிபராசக்தி கூட சித்தராக உலவி மக்களிடையே நடமாடுகிறாள். பலர் இதைக்கண்டு அனுபவித்திருக்கிறார்கள். சித்தர்களுடைய பௌர்ணமி இந்த சித்திரா பௌர்ணமி.

மருவூரில் நடைபெறும் பௌர்ணமி வேள்விப் பூஜையில் சித்தர்கள் ஆவலோடு வந்து கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வேண்டுதல்களையெல்லாம் எப்படி தீர்க்கலாம் என சிந்திக்கிறார்கள். மனிதர்களாக நடமாடி அவர்களுடைய கவலைகளைத் தீர்க்கிறார்கள். அன்னதானத்தில் பங்குபற்றி உணவருந்தி மகிழ்கிறார்கள். இந்த மகேஸ்வர பூஜையில் பங்குபற்றும் அடியார்களை வாழ்த்தி மகிழ்கிறார்கள். அருவமாக உருவமாக உலவும் சித்தர்களின் ஆசியால் வாழ்க்கையில் எம்மை வருத்தும் சாபங்கள் தீர்க்கப்படுகின்றன. சித்தர்கள் கடவுளைக் கண்டவர்கள். கடவுளாக இருப்பவர்கள். அவர்கள் உலாவும் மாதம் இந்த சித்திரை மாதம். அத்தனை சிறப்பானது இந்த சித்திரைப் பௌர்ணமி. சித்தர் மாதம் தான் சித்திரை மாதமாக மாறியதோ தெரியவில்லை. இந்த மாதத்திற்கான பௌர்ணமித் திதி சிறப்பானது. புத்தர் ஞானம் பெற்ற நாளானதால் புத்த பூர்ணிமா எனவும் அழைக்கப்படுகிறது.

அன்று

வேள்விகள் மகாராஜாக்களாலும்,மகா பிரபுக்களாலும் நடத்தப்பட்டது. இராஜ சூய யாகம் கூட நடத்தப்பட்டது. நாட்டு நலம் வேண்டி செய்தார்கள். அரசாட்சி நீடிக்க செய்தார்கள். தமக்கு பின் அரசாட்சி செய்ய ஒரு வாரிசு வேண்டுமே என மிகப் பெரிய யாகமெல்லாம் செய்தார்கள்.

ஆனால் இன்று

அரசர்களால்,அந்தணப் பெருமக்களால் தர்ப்பை போட்டு சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க செய்யப்படும் வேள்விகளாக அல்லாமல் பாமரமக்களால் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க யாகம் செய்யப்படுகிறது. ஒரு தாய் தன் குழந்தைக்கு காலங்களுக்கேற்ப உணவூட்டுவது போல உலகத் தாயாகிய அன்னை ஆதிபராசக்தி அவ்வப் போது விழாக்களை ஏற்படுத்தி எம்மை ஆன்மீக வழியில் இட்டுச் செல்கிறாள். அப்படிப்பட்ட ஒரு விழா தான் சித்திரை பௌர்ணமி வேள்வியாகும்.

அன்று அரசன் நடத்திய வேள்வியை இன்று மேல்மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தி முன்னின்று நடத்துகிறாள்.

அன்னை எப்படி இந்த வேள்விகளை நடத்துகிறாள்! எமது குருவாக திகழும் அடிகளார் உருவில் அவற்றை கூறுகிறாள். யாக குண்டங்களின் அமைப்பை விளக்குகிறாள். ஒவ்வொரு யாக குண்டமும் இந்த அளவுப் பிரமாணமாக அமைய வேண்டும் என அளவுகளைக் கூறுகிறாள். அத்தனையும் அன்னையின் ஆணைப்படியே நடக்கின்றன.
சித்திரை பௌர்ணமி விழா என்றால் செவ்வாடைத் தொண்டர்களுக்குதான் எத்தனை குதூகலம். சித்தர் பீடத்தை அலங்கரிப்பதற்கு ஆவலுடன் செயற்படுவார்கள். முகப்பு அலங்காரம் பிரமாண்டமாக அமைந்திருக்கும். சித்தர் பீட வளாகம் முழுவதும் ஒரு நேர்த்தியுடன் அழகான முறையில் சதுர, சாய் சதுர, வட்ட, ஐங்கோண, அறுகோண, முக்கோண வடிவங்களில் வரிசை வரிசையாக யாக குண்டங்கள்! கருவறையின் முன்பும், புற்று மண்டபத்தின் முன்பும், ஓம் சக்தி மேடையின் முன்பும் சூல வடிவிலும், நாகங்கள், இரட்டை நாகங்கள், கண்களையும், கருத்தையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.

யாக குண்டங்கள் சரியான முறையில் அமைக்கப்படவேண்டும் என்பதில் அன்னை மிகக் கவனமாக இருக்கிறாள். யாக குண்டங்களின் அமைப்பில் சிறு பிழை இருந்தாலும் அது மிகப் பெரிய பாதிப்பைத் தரும். ஈரத்துணியுடன் வந்து யாக குண்டங்களை செவ்வாடைத் தொண்டர் அமைக்கும் போது அம்மா பார்த்து பார்த்து சரி செய்கிறாள். நூல் இழையில் தவறு இருப்பினும் அது சரிசெய்யப்படுகின்றது. ஆகுதிகளை நின்று கொண்டு போடக்கூடாது என்பதற்காக இருந்து கொண்டு செய்யும் அளவு குண்டங்கள் அமைக்கப்படும் அழகுதான் என்ன?

யாக குண்டங்கள் அமைப்பதற்காக எங்கெங்கோ இருந்து கல்லும் மண்ணும் கொண்டு வந்தாலும் மருவத்தூரில் அவை புனிதமாக்கப்படுகிறது. பசுவின் சாணம் எவ்வளவு புனிதமானது என்பது உங்களுக்கு தெரியும். அன்று பசுவின் சாணத்தால் முற்றத்தை மெழுகி கோலமிடுவார்கள். ஆனால் இன்று நம் நாட்டில் சூழ்நிலைகாரணமாகவும், இயந்திர வேலை மயமாக்கப்பட்டதாலும் இது தவிர்க்கப்பட்டாலும் பசுவின் சாணத்துக்கு கிருமிகளை அகற்றும் சக்தி உண்டென்பது எல்லோரும் அறிந்தது. அந்த பசுவின் சாணம் மூலம் யாக குண்டங்கள் மெழுகப்பட்டு சுத்தமாக்கப்படுகின்றன. ஆலய வளாகம் எங்கும் சாணத்தின் வாசம் கமகமக்கும். குஜராத் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு புற்றுநோய். வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் அந்த பெண் பசுவின் சாணத்தை எடுத்து கரைத்து குடித்தாளாம். கிருமிகள் அழிக்கப்பட்டு அப்பெண் உயிர் வாழ்வதாக சொல்கிறார்கள். அத்தகைய கிருமிகளைக் கூட அழிக்கும் பசுவின் சாணத்தால் யாக குண்டங்கள் மெழுகப்பட்டு சுத்தமாக்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறது மருவூரில் மட்டுமே.

இந்த வேள்வி பூஜைகள் மூலம் எமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம்!அன்னையின் வழிகாட்டுதலில் நம் வினைகள் தணிய யாக குண்டங்களில் அமர்ந்து யாகம் செய்வதும், கலச விளக்குகளுக்கு அர்ச்சனை செய்வதும் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று வழிபடுவதும் அம்மா அருளியவை.

சித்திரைப் பௌர்ணமியில் மருவூர் மண்ணில் நாம் இருப்பது பெரிய பாக்கியம். மருவூர் யாகத்தில் பங்குபற்றவும் யாக சாலைகளை பார்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆலயம் முழுவதும் யாக குண்டங்கள். அர்ச்சகர்கள் இல்லை. சமஸ்கிருத மந்திரங்கள் இல்லை. ஆனால் பக்தியுடன் செய்யப்படுகிறது. சித்தர் பீடத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஒலி அலைகளில் ஊடுருவி வரும் மந்திர ஒலிகள் காதில் விழுகின்றன. காற்றில் தவழ்ந்து வரும் புகை நாசி வழியாக உள்ளே போகிறது. அதன் அருட்பயன்களை நாம் பெற வேண்டாமா?

எமது மனம் ஒரு குறிக்கோளுடன் இருந்தால் வேறெந்த கோள்களும் கிட்ட நெருங்காது. மருவூர் யாக குண்டங்களுக்கு சர்வ வல்லமையுண்டு. வேள்விகளில் கூறப்படும் சங்கற்பங்கள் அனைத்தும் அன்னையால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. குடும்ப நலன் வேண்டி, கல்வி சிறக்க, திருமணம் நடக்க, பிள்ளை வரம் வேண்டி, தொழில் வாய்ப்பு பெற உங்கள் தேவைகள் எதுவோ அத்தனையையும் அந்த வேள்விக்குண்டத்தின் முன்பு கலச விளக்குகளுக்கு முன்பு இருந்து சொல்லிப்பாருங்கள். சங்கற்பங்கள் சத்தியமாக்கப்படுகின்றன. அனைத்தும் சீராக்கப்படுகின்றது. மனதுக்கு அமைதி தரும் மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தவுடன் மனமெல்லாம் பக்தி பரவசமாகிவிடும். அம்மா உணர்த்த உணர்த்த எழுதப்பட்ட தமிழ் மந்திரங்கள் அல்லவா? அம்மாவின் அருள் நிலையில் எழுதப்பட்ட அற்புத மந்திரங்கள். இந்த மந்திரங்களின் இரு பக்கங்களிலும் "ஓம்' ஒலிக்கிறது. "ஓம்' மந்திரங்களின் காப்பு. எல்லா மந்திரங்களிலும் ஓம் வடிவத்தில் இருக்கும் அன்னை ஒலி வடிவில் கவசமாக ஒலிக்கிறாள்.

கலச சக்கரங்களில் இருப்பதே மந்திரங்களில் வருகிறது. மந்திரங்களின் சக்தி எம்முள் இருந்து வெளிப்பட்டு நாம் அளிக்கும் ""அவிஸ்' எனப்படும் ஆகுதி மூலம் அன்னையிடம் கையளிக்கப்படுகிறது. பஞ்சபூதங்களில் நெருப்பு ஒன்றுதான் மேலெழுகிறது. எனவே யாக குண்டங்களில் நாம் இடும் ஒவ்வொரு பொருளையும் அக்னி தேவர்களிடம் கொண்டு சென்று சமர்ப்பிக்க தேவர்கள் அதை ஆவலுடன் பெற்று அன்னையிடம் கையளிக்கிறார்கள், எம் தேவைகள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.

பெண் உண்மையானவள், திண்மையானவள், நேர்மையானவள், சோர்வில்லாதவள், பொறுமையானவள். அதனால்தான் ஆலயத்தொண்டுகளை பெண்களே செய்யப் பணித்தாள். வேறெந்த ஆலயங்களிலும் இல்லாத ஒன்று மருவத்தூரில் மட்டுமே நாம் காணலாம். அதுதான் பெண்ணுக்கு உரிமை கொடுத்தார்கள். கலசத்தில் நூல் சுற்றுவது முதல் கும்பாபிஷேகம் செய்வது வரை பெண்கள் செய்யும் தொண்டுகளை வேறெங்கே காண்பீர்கள்?

குத்துவிளக்கின் முன் குடும்ப விளக்குகள் அமர்ந்து கலச விளக்கு பூஜை செய்வதும், வேப்பிலையால் விளக்கு பூஜை செய்வதும் மருவத்தூரில் தான்! இத்தகைய அற்புதமான வேள்வி விரும்பியதை தரும். தெய்வமும் விரும்பித் தரும். இரண்டும் இறையருளால் கிடைக்கிறது.

83ஆம் ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லை, மக்கள் தண்ணீருக்காக அலைந்தனர். அப்போது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கின் படி தேனாம்பேட்டையில் மே 13 ஆம் திகதி வேள்விப் பூஜை நடைபெற்றது. வேள்வி பகல் நடந்தது. இரவு மழை பொழிந்து தண்ணீர் தாகத்தை தீர்த்தது.

1984ஆம் ஆண்டு மே 12,13ஆம் திகதியில் மதுரையில் வேள்வி நடைபெற்றது. கண்ணகியின் சாபம் காரணமாக கந்தக பூமியாக மாறிவிட்ட மதுரையை சாந்த பூமியாக மாற்றவும் மகளிர் மேம்பாட்டுக்காகவும் வேள்வி நடத்துமாறு அன்னை ஆணையிட்டபடி வேள்வி நடைபெற்றது. அந்த வேள்வியில் அன்னை ஆதிபராசக்தி வெள்ளை ஆடை அணிந்த பெண்ணாக வந்து அடிகளார் கைகளால் பால் வாங்கி கொடுத்த காட்சி பல கண்களுக்கு தெரிந்தது ஒரு அற்புதம்.

83ஆம் ஆண்டு ஆலயத்தில் மே மாதம் நடந்த வேள்வியில் தலவிருட்சம் அருகே ஒரு முக்கோண யாக குண்டம் அமைத்திருந்தார்கள். அன்னை வேப்பிலையோடு சுற்றி வந்தாள். யாக குண்டங்கள் சரியாக அமைந்திருக்கிறதா என கவனித்தாள். இந்த யாக குண்டம் அருகே வந்து நின்று விட்டாள். சிறு பிழை அங்கே தெரிந்தது. அதை உடைத்தும் செய்ய முடியாது. உடனே அன்னை வேப்பிலையை கிள்ளி அக் குண்டத்தில் போட அது பூவாக மாறி விழுந்து அந்த தவறை சரி செய்து விட்டது.

99ஆ ம் ஆண்டு உலக சமூக நேய மகா வேள்வி நடத்தப்பட்டது. அன்னையிடம் 15 கோரிக்கைகள் சங்கற்பமாக வைத்து 1200 யாக குண்டங்கள் அமைத்து யாகம் செய்யப்பட்டது.

இம் முறை இன்று வெள்ளிக் கிழமை சித்திரை பௌர்ணமி அன்று மாபெரும் கலச விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. வெள்ளியன்று நடைபெறும் இந்த வேள்வியின் முக்கிய விசேட யாக குண்டம் திரிசூல அமைப்பைக் கொண்டது. எமது இலங்கை நாட்டின் சமாதானத்துக்காக இலங்கைச் சக்திகளை திரிசூல யாக குண்டத்தை எடுத்துச் செய்யும் படி பணித்துள்ளாள் அன்னை ஆதிபராசக்தி!

அது மட்டுமா?

எமது நாட்டில் சாந்தி சமாதானம் நிலவும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இலங்கை வாழ் மக்கள் சகோதர உணர்வோடு சாதி, மத, மொழி வேறுபாடின்றி அன்புடன் ஒற்றுமையுடன் வாழ இந்த வேள்வி வழிசமைக்கும்!

அழகாபுரி என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த இலங்கைத் திருநாட்டை அன்னை ஆதிபராசக்தி தன் கரங்களில் மீண்டும் ஏற்றுக் கொள்ளும் அற்புதத் திருநாள் விரைவில் வர இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி!

ஆம்! அன்னை ஆதிபராசக்தி அடிகளார் மூலமாக அருள் வாக்கில் கூறியிருக்கும் ஒரு இனிய செய்தி என்ன தெரியுமா? இலங்கையின் தலைநகரில் சக்தி பீடம் அமையப் போகிறது. அன்னை ஆதிபராசக்தியே முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தி அந்த பீடத்தில் வந்து அமர உள்ளாள். அடிகளார் மூலம் அருள்வாக்கில் கூறிய இந்த அற்புத நிகழ்வு என்று நடக்கும்?

சக்தி பீடம் விரைவில் அமையத்தான் போகிறது. அன்னையின் பாதம் இலங்கை மண்ணில் பதிந்து எமது நாடு புனிதமடையத்தான் போகிறது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழத்தான் போகிறார்கள்! எமது நாடு மீண்டும் வளம் கொழிக்கும் நாடாக மாறத்தான் போகிறது. இது அம்மாவின் அருள் வாக்கு. திரிசூல யாகம் அதற்கு வழி சமைக்கும் என்பது செவ்வாடைத் தொண்டர்களின் நம்பிக்கை!

அன்னையின் பாதம் படும் நாள் விரைவில் வரவேண்டும் என எல்லாம் வல்ல எம் பெருமாட்டியை மனதார தொழுவோமாக!

எழுதியவர்: கௌரி விமலேந்திரன்

நன்றி: தினக்குரல், 08 மே 2009

Wednesday, December 16, 2009

பக்திப் பூக்களுக்கு கிடைத்த ஆசிகள்

சிவாகம திலகம், சிவாகம பூஷணம்
பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா
அவர்கள் வழங்கிய

ஆசியுரை

திருமதி கௌரி விமலேந்திரன் அவர்கள் பல வருட காலமாக சமயத் தொண்டிலும் சமய நூல்கள் வெளியீட்டிலும் ஈடுபட்டு வருகின்றார். 'பக்திப் பூக்கள்' வரிசையில் மூன்று சமய நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.இப்போதும் பெரும் பிரயத்தனம் செய்து கேதார கௌரி விரதம் பற்றிய இந்த நூலை வெளியிடுகின்றார்.அவரது சமயத் தொண்டு மங்கா ஒளி விளக்காய் நீண்டகாலம் இடம்பெற வேண்டும்மெனவும் மேலும் மேலும் சமய நூல்களை வெளியிட வேண்டுமெனவும் விநாயகப் பெருமானின் பாதார விந்தங்களை வணங்கி வாழ்த்தி ஆசியும் கூறுகின்றேன்.

பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா
ஸ்ரீ பால செல்வ விநாயகமூர்த்தி கோவில்
கப்பித்தாவத்தை

செல்வி மாலா சபாரட்ணம்
அவர்கள் வழங்கிய

வாழ்த்துரை

"தேவி! உனது கடைக்கண் பார்வை பெற்ற மனிதருக்கு சரீர ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பகைவரின் ஒடுக்கம் இவை அரியனவல்ல, எளிதில் பெறக் கூடியன.

இவ்வாறு தேவேந்திரனால் துதிக்கப் பெற்றவள் மகாலக்ஷ்மி. தேவ தேவர்களினால் நன்கு போற்றி வணங்கப்பட்டவளும், யாவற்றிலும் நிறைந்துள்ளவளாவும் விளங்கும் லக்ஷ்மி தேவியின் பெருமையை எளிதாக எல்லோரும் அறியும் வண்ணம் வழங்கி இருக்கிறார் சகோதரி கௌரி விமலேந்திரன் . இவருடைய இம்முயற்சியால் இறையுணர்வு மக்களிடம் மேன்மேலும் பெருகிறது, மக்களுக்கு இறையருள் சேர்கிறது.

கௌரியும், அவர் குடும்பத்தினரும் இந்நூலைப் படிக்கும் அனைவரும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் கடாட்க்ஷத்தால் சிறப்புற்று வாழ ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருமார்புறையும் ஸ்ரீதேவியை வணங்கி வேண்டுகிறேன்.

செல்வி மாலா சபாரட்ணம்
ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலயம்
கம்பன் கோட்டம்

சீ. விநாசித்தம்பி M.A
அவர்கள் வழங்கிய
வாழ்த்துரை

அரியதவம் முன்புசெய்த ஞானச்செல்வி
அருள்வந்த கௌரிவெளி யீடுசெய்யும்
பெரியபக்திப் பூக்களெனும் வெளியீடன்பு
பெருக்கெடுத்து வேதத்தேன் கலந்து சோதித்
துரியவெளிச் சகஸ்ரதளத் தூற்றெடுக்கும்
சுவையமுதாய் விளங்கி, மக்கள் வீடுகாணும்
உரியசொத்தாய் மலர்வதுகண் டுளம் குளிர்ந்தேன்
உத்தமியின் பணி பொதிகை மலைபோல்வாழி !

சீ. விநாசித்தம்பி M.A
ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம்
நாகேஸ்வரம், அளவெட்டி.

சிவஸ்ரீ பரமேஸ்வர ஜெயகுமாரக்குருக்கள்
அவர்கள் வழங்கிய
ஆசியுரை

இப்பூவுலகிலெ வாழ்கின்ற நாம் வாழுங்காலத்தில் எவ்வளவு நல்ல காரியங்கள்
செய்கின்றோமோ அத்தனையும் எமக்கு நன்மை பயக்கும். இவ்வண்ணமாக திருமதி கௌரி விமலேந்திரன் அவர்களால் ஆக்கப்பட்ட புத்தகங்களை கண்ணுற்றேன் அத்தனையும் அருமையான விடயங்களைத் தொகுத்திருக்கிறார்.
பக்திப் பூக்கள் வரிசையில் இன்று "வைரவர் வழிபாடு" என்கின்ற பூ மலர்கிறது. இம் மலரோடு நின்று விடாமல் இன்னும் நிறைய ஆக்கங்களை நல்க சங்குவேலி சித்த ஞானவைரவப் பெருமான் பேரருள் கிடைக்க ஆசிகூறி இம்மலர் சிறக்க வாழ்த்துகிறேன்.

சிவஸ்ரீ பரமேஸ்வர ஜெயகுமாரக்குருக்கள்
மானிப்பாய் மருதடி விநாயகர் திருக்கோவில்
சங்குவேலி சித்த ஞானவைரவர் திருக்கொவில்
பிரதமகுரு

Tuesday, December 15, 2009

நான் வெளியிட்ட "பக்திப் பூக்கள்" தொகுப்புகள்

வணக்கம்

எனது இந்த பக்திப்பூக்கள் தொகுப்பு எனது சிறிய முயற்சியால் உருவானது. இதுவரை ஆஞ்சநேயர் வழிபாடு, திருவிள்க்கு வழிபாடு, இராகுகாலப் பூஜை, கேதார கௌரி விரதம், மஹாலக்ஷ்மி வழிபாடு, வைரவர் வ்ழிபாடு என ஆறு தொகுப்புக்கள் வெளிவந்தன. எனது இந்த முயற்சிக்கு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் - 'அம்மா' என அன்போடு அழைக்கப்படும் பங்காரு அடிகளாரின் ஆசி கிடைத்தது எனக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். அதுமட்டுமல்ல - எத்தனையோ பெரியவர்களின் வாழ்த்தும் ஆசியும் என்னை மேலும் தொகுக்க காரணமாக் அமைந்தன.

இந்த தொகுப்பு விபரங்கள் எளிய தமிழில் எழுத வேண்டும் என விரும்பினேன். சாதாரண பாமர மக்களும் படித்து பயன் பெற வேண்டும் என்பதே என் ஆவல்!

ஆதிசங்கரர் கூறுகிறார்:
'எதையும் நானாக எழுதவில்லை - வசிஷ்டர் விசுவாமித்திரர் போன்ற ஞானிகளிடமிருந்து பெற்றதே "என்பதற்க்கிணங்க இந்த விரத விபரங்களைப்பற்றிய தகவல்கள் என் சொந்தமாக நான் எழுதியதல்ல! விரதங்களைப்பற்றி நான் சுயமாக எடுத்து சொல்ல முடியாதல்லவா?

எனவே எத்தனையோ நூல்களிலிருந்து சிறுகச் சிறுக சேர்த்து தொகுக்கப்பட்டதே இவை. இதன் மூலம் எத்தனையோ நூல்களைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அறிந்து கொண்டதை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தில் வெளிவந்ததே இந்தத் தொகுப்புக்கள்.

இலங்கையின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல நாடுகளைச் சேர்ந்தோரும் இப்புத்தகங்களை வாங்கி பயனடைந்திருக்கிறார்கள் என எண்ணும்போது இறைவனின் அருளாசி தான் இதற்கு காரணமாகிறது என உணர்கிறேன்.

உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் எனது இந்த சிறு முயற்சிக்கு வேண்டும்.

நன்றி!!!!

கௌரி விமலேந்திரன்


எனது தொகுப்புக்கள்

1. ஆஞ்சநேயர் வழிபாடு - 2001

2. திருவிளக்கு வழிபாடு - 2001

3. இராகு காலப்பூஜை - 2003

4. கேதார கௌரி விரதம் - 2004

5. ஸ்ரீ மஹாலக்ஷ்மி - 2005

6. ஆஞ்சநேயர் வழிபாடு தொகுதி 2

7. வைரவர் வழிபாடு - 2005


மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி சித்தர் பீடம்
அருட்திரு பங்காரு அடிகளாரின் ஆசி


ஆன்மீகம் வளர நல்ல புத்தகங்களை தொகுத்து எழுதுகிறாய்.
இன்னும் இன்னும் நிறைய எழுது.நல்ல காரியங்களை அழகாக
செய்யும் உனக்கு அம்மாவின் ஆசிகள்.

- *அம்மா*



கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
அவர்கள் வழங்கிய
வாழ்த்துரை
இராகுகாலப் பூஜை - தொகுப்பு நூல்

ருட்பாடல்களைப் பாடுவதும் எழுதி வெளியிடுவதும் எழுதுவோருக்கு வாழ்த்து வழங்குவதும் சமயநெறி நிற்போரின் இன்றியமையாத கடமையாகும். எழுதும் பணியைத் தன் பணியாக ஏற்று வாழும் திருமதி கௌரி விமலேந்திரன் அவர்கள் சைவப்பற்றும் தமிழ்ப் பற்றும் மிக்கவராவர். "பக்திப் பூக்கள்" என்ற வரிசையில் ஆஞ்ஜநேயர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு என்பவை வெளிவந்து இருப்பது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து தற்போது "இராகுகாலப் பூஜை" என்பது பற்றிய தொகுப்பு நூல் ஒன்று வெளிவர இருப்பது பாராட்டுக்குரியதாகும். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று பாடினார் மாணிக்க வாசக சுவாமிகள். திருமதி கௌரி அவர்களும் இறையருள் வழிகாட்ட இந்நூல்களை எழுதி வழங்குகிறார்கள். என்வே இவற்றையெல்லாம் எமது இளைய சந்ததியினரும் முதியவர்களும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்களாக என்று வாழ்த்தி அமைகின்றேன்.

கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

தலைவர், ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை, ஸ்ரீ லங்கா.



சிவநெறிக் கலாநிதி, சைவநன்மணி சிவமயச் செல்வி
புலவர் ஸ்ரீ விசுவாம்பா மாதாஜி
அவர்கள் வழங்கும்

ஆசியுரை

கிரக தோஷம் என்பன இன்று நேற்றல்ல, ஆதி காலத்திலும் அதாவது வேத காலம் தொடக்கம் இன்றுவரை மனிதன் பிறந்த நாள் நட்சத்திரம், பூர்வீகப் புண்ணியம் ஊழ்வினைப்படி கிரகதோஷம் உண்டாவது நியதியாகும்.

குரு, சனி, ராகு கேது என்பவை தாம் இருக்கும் வீட்டைப் பார்க்கும் நட்சத்திர நாட்காரரை ஒருகை பார்கும் என்பது சாஸ்திரக்காரரின் கூற்றாகும். இவைகளை நாம் அனுபவம் மூலம் அறியலாம். குரு எட்டாமிடத்தில் இருந்தால் தன்னொடு ஒத்த நட்சத்திரக்காரரை ஆட்டிப் படைக்கும். இவ்வாறே ஒவ்வொரு கிரகங்களின் கோட்பாடாகும்.

அதனால் இறைவழிபாட்டுடன் கிரகங்களையும் வலம் வந்து வணங்க வேண்டுமென்பதற்காக ஆலயங்களில் வடகிழக்கில் நவக்கிரக சந்நிதானம் இருப்பதை காண்கிறோம்.

பண்டைக் காலத்தில் மக்கள் கிரகதோஷங்களில் இருந்து விலகி நடப்பதிற்காக துர்க்கைச் சித்தர் அகத்தியர் முதலியோர் கிரகதோஷங்களின் தெய்வங்களைப் பாடியுள்ளனர்.நாள் வணக்கம், மாத வணக்கம் கூடப் பாடப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் தொகுத்து ஒரே பார்வையில் ஒரே நூலில் திருமதி கௌரி விமலேந்திரன் அவர்கள் தந்துள்ளார்.

திருமதி கௌரி விமலேந்திரன் தம்பதிகள் சிறந்த ஆன்மீக, ஆத்மீக தாகம் கொண்டவர்கள். இவர்கள் இந்தியாவில் உள்ள கோயில்கள் எல்லாம் தல தீர்த்த யாத்திரை செய்ததுடன் பல ஞானிகளையும் தரிசித்து சித்தி பெற்றவர்கள்.

திருமதி கௌரி விமலேந்திரனின் மனையகம் ஓர் கோயிலோ என்று சிந்தித்து உணரக்கூடிய உணர்வுகளை அவர்களின் மனை செல்வோர் அறிவர். இடபமும் சிவலிங்கம் (ஸ்படிகம்) காணக்கூடியதாக உள்ளது. உண்மையாக திருமதி கௌரி விமலேந்திரன் சிறந்த தெய்வீக பக்தியின் மிகுதியினால் சிறப்பாகப் பெண்களிடையே தோஷபீடை அணுகாது இந்நூலை இயற்றியது பாராட்டுதற்குரியது. வரவேற்கக்கூடியது.இந்நூலைப் பெற்று கன்னிப் பெண்களானலும் சரி இல்லறவாசிப் பெண் ஆண்களானாலும் சரி முக்கர சுத்தியுடன் கூறப்படுகின்ற விதிகளுடன் மங்கள விளக்கேற்றி, வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் பாராயணம் செய்து வருவார்களானால் சுபீட்சம் அடைவார்கள் என்பது உண்மையாகும். என்வே இத்தகைய நூலைத் தொகுது வெளியிட்டுத் தந்த திருமதி விமலேந்திரன் அவர்களை ஆசீர்வதிப்பதிப்பதுடன் மேலும் இது போன்ற நூல்களை வெளியிடப் பிரார்த்தனை செய்கின்றேன்.
வணக்கம்
சாந்தி !

மாதாஜி

இந்த நூல்களைப் பற்றிய விபரம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

gowrivimal@gmail.com