Wednesday, December 16, 2009

பக்திப் பூக்களுக்கு கிடைத்த ஆசிகள்

சிவாகம திலகம், சிவாகம பூஷணம்
பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா
அவர்கள் வழங்கிய

ஆசியுரை

திருமதி கௌரி விமலேந்திரன் அவர்கள் பல வருட காலமாக சமயத் தொண்டிலும் சமய நூல்கள் வெளியீட்டிலும் ஈடுபட்டு வருகின்றார். 'பக்திப் பூக்கள்' வரிசையில் மூன்று சமய நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.இப்போதும் பெரும் பிரயத்தனம் செய்து கேதார கௌரி விரதம் பற்றிய இந்த நூலை வெளியிடுகின்றார்.அவரது சமயத் தொண்டு மங்கா ஒளி விளக்காய் நீண்டகாலம் இடம்பெற வேண்டும்மெனவும் மேலும் மேலும் சமய நூல்களை வெளியிட வேண்டுமெனவும் விநாயகப் பெருமானின் பாதார விந்தங்களை வணங்கி வாழ்த்தி ஆசியும் கூறுகின்றேன்.

பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா
ஸ்ரீ பால செல்வ விநாயகமூர்த்தி கோவில்
கப்பித்தாவத்தை

செல்வி மாலா சபாரட்ணம்
அவர்கள் வழங்கிய

வாழ்த்துரை

"தேவி! உனது கடைக்கண் பார்வை பெற்ற மனிதருக்கு சரீர ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பகைவரின் ஒடுக்கம் இவை அரியனவல்ல, எளிதில் பெறக் கூடியன.

இவ்வாறு தேவேந்திரனால் துதிக்கப் பெற்றவள் மகாலக்ஷ்மி. தேவ தேவர்களினால் நன்கு போற்றி வணங்கப்பட்டவளும், யாவற்றிலும் நிறைந்துள்ளவளாவும் விளங்கும் லக்ஷ்மி தேவியின் பெருமையை எளிதாக எல்லோரும் அறியும் வண்ணம் வழங்கி இருக்கிறார் சகோதரி கௌரி விமலேந்திரன் . இவருடைய இம்முயற்சியால் இறையுணர்வு மக்களிடம் மேன்மேலும் பெருகிறது, மக்களுக்கு இறையருள் சேர்கிறது.

கௌரியும், அவர் குடும்பத்தினரும் இந்நூலைப் படிக்கும் அனைவரும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் கடாட்க்ஷத்தால் சிறப்புற்று வாழ ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருமார்புறையும் ஸ்ரீதேவியை வணங்கி வேண்டுகிறேன்.

செல்வி மாலா சபாரட்ணம்
ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலயம்
கம்பன் கோட்டம்

சீ. விநாசித்தம்பி M.A
அவர்கள் வழங்கிய
வாழ்த்துரை

அரியதவம் முன்புசெய்த ஞானச்செல்வி
அருள்வந்த கௌரிவெளி யீடுசெய்யும்
பெரியபக்திப் பூக்களெனும் வெளியீடன்பு
பெருக்கெடுத்து வேதத்தேன் கலந்து சோதித்
துரியவெளிச் சகஸ்ரதளத் தூற்றெடுக்கும்
சுவையமுதாய் விளங்கி, மக்கள் வீடுகாணும்
உரியசொத்தாய் மலர்வதுகண் டுளம் குளிர்ந்தேன்
உத்தமியின் பணி பொதிகை மலைபோல்வாழி !

சீ. விநாசித்தம்பி M.A
ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம்
நாகேஸ்வரம், அளவெட்டி.

சிவஸ்ரீ பரமேஸ்வர ஜெயகுமாரக்குருக்கள்
அவர்கள் வழங்கிய
ஆசியுரை

இப்பூவுலகிலெ வாழ்கின்ற நாம் வாழுங்காலத்தில் எவ்வளவு நல்ல காரியங்கள்
செய்கின்றோமோ அத்தனையும் எமக்கு நன்மை பயக்கும். இவ்வண்ணமாக திருமதி கௌரி விமலேந்திரன் அவர்களால் ஆக்கப்பட்ட புத்தகங்களை கண்ணுற்றேன் அத்தனையும் அருமையான விடயங்களைத் தொகுத்திருக்கிறார்.
பக்திப் பூக்கள் வரிசையில் இன்று "வைரவர் வழிபாடு" என்கின்ற பூ மலர்கிறது. இம் மலரோடு நின்று விடாமல் இன்னும் நிறைய ஆக்கங்களை நல்க சங்குவேலி சித்த ஞானவைரவப் பெருமான் பேரருள் கிடைக்க ஆசிகூறி இம்மலர் சிறக்க வாழ்த்துகிறேன்.

சிவஸ்ரீ பரமேஸ்வர ஜெயகுமாரக்குருக்கள்
மானிப்பாய் மருதடி விநாயகர் திருக்கோவில்
சங்குவேலி சித்த ஞானவைரவர் திருக்கொவில்
பிரதமகுரு

No comments: